12 தெரியாமலே போகட்டும் போ…..

உன்னைத் தொட்டு விளையாடும் மழைத் துளிகளும்,

உன் ஸ்பரிசம் தொட்டுச்  செல்லும்

என் மூச்சுக் காற்று கலந்த தென்றலும்,

என் காதலை உன்னிடம் சொல்ல மறந்தால்

என் காதல் உனக்கு

தெரியாமலே போகட்டும் போ…..

 

நீ நனையும் மழை, ரசிக்கும் இயற்கை

உணரும் தென்றல், குளிர் பனிக் காற்று

உன்னை தொட்டு  மெய்மறக்க செய்யும் போது

உன் மனம் என்னை நினைக்கச் செய்திடாவிடில்

என்காதல்உனக்கு

தெரியாமலே போகட்டும் போ…..

 

நீண்ட தொடர் வண்டிப் பயணம்,

நீரில் மிதக்கும் மேகங்கள்,

நீ காணும் கனவுகள்,

இவையாவும் உன் நாட்களில் ஒரு முறை கூட

என்னை நினைவுபடுத்தவில்லை எனில்

என் காதல் உனக்கு

தெரியாமலே போகட்டும் போ…..

 

என்னுள் நீயும் உன்னுள் நானும்

நினைவுகளாய் வாழ்ந்த நாட்கள்,

உனக்காக நான் எழுதிய கவிதைகள்,

அதை உன் விரல் தொட்டு ரசிக்க வைத்த உன்கண்கள்

மறுமுறை நீ புதுகவிதைகள் படிக்கும் போது

என்னை உன் மனதில் நிறைக்காவிடில்

என் காதல் உனக்கு

தெரியாமலே போகட்டும் போ…..

 

என் காதல் நீயென்று நானும்,

உன் வாழ்வின் வசந்தம் நானென்று நீயும்,

கைகோர்த்து நடந்து திரிந்த நம்மனது

என் கன்னம் தொட்டு விளையாடிய உன் கைகள்,

வேறொருவன் உன் கைசேரும் போது

உன் மனம் என்னை யோசிக்காமல் இருந்தால்,

என்காதல்உனக்கு

தெரியாமலே போகட்டும் போ…..

 

என் காதல் சொன்ன நாட்களில்

பதில்ஏதும்பேசாமல், வெட்கத்துடன்

உன் புன்னகையை மட்டும் பரிசாய்த் தந்ததும்,

உன் பிறந்தநாளன்று முத்தங்களை மட்டும்

பரிசாய்த் தந்து ஏமாற்றியதும்,

வேறொருவன் உன்னை முத்தமிடும் போது,

உன்மேல் நான் கொண்ட காதலை உன்மனம் அறியாவிடில்

என்காதல்உனக்கு

தெரியாமலே போகட்டும் போ…..

 

கோவிலுக்கு சென்று நீ கடவுளை வணங்கும் போது,

என் கண்களை மூடாமல் உன்னைகண்டு ரசித்ததும்,

அதை பார்த்து என்னை நீ செல்லமாய் கடிந்ததும்,

இன்னொருமுறை நீ கோவிலுக்கு செல்லும் போது

என்னை நினைக்கவில்லை எனில்,

என்காதல்உனக்கு

தெரியாமலே போகட்டும் போ…..

 

நாம் முதலாய் சந்தித்த இடங்களும்,

உனக்காக காத்திருந்த மலர் சோலைகளும்,

உனக்காகவே வாழ்ந்த நாட்களையும்,

நீ தனிமையில் இருக்கும்போது

உன்மனம் என்னை நினைக்கமறந்தால்

என் காதல் உனக்கு

தெரியாமலே போகட்டும் போ…..

 

License

கவிதையும் காதலே! Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.. All Rights Reserved.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published.