17 மண் வாசம்
சேற்றில் விளையாடும் நெற்பயிர்களின் வாசம்
நெல்மணி தாங்கிய நெற்பயிர்களின்
தலை நோகாமல் இருக்க,
சாமரம் வீசும் தென்னை மர கீற்றுக்கள்…
பூவரசு மரங்களின் ஒளிந்து விளையாடும் பறவைகள்,
எந்தப் பூக்களில் தேனெடுப்பது என்று
குழம்பித் திரியும் தேனீக்கள்…
பல வண்ண மலர்களில் எந்த வண்ணம்
தன்னுடல் சேருமோ என்று மகிழ்ச்சியாய்
பறந்து திரியும் வண்ணத்துப் பட்டாம் பூச்சிகள்….
மூங்கில் கற்றைகளுக்கிடையில் பாடித் திரியும்
பாடகன்/பாடகி பறவைகளுக்காக
மெட்டுக்கள் சேர்க்கும் நீரோடைகளும் அருவிகளும்
பௌர்ணமி நிலா வீதி உலா வர
இரவுகளின் மௌனத்தில் தவம் செய்யும் ரீங்காரப் பூச்சிகள்….
மரங்களும் தங்களுக்குள் போட்டியிட்டுக்கொள்ளும்
பூக்களைத் தலையில் சூடிக்கொண்டு
யாவருக்கழகு அதிகமென்று..
எங்கள் நிலமகள், வான்மகள் வாரி
இரைத்த நீரில் விளையாடிய நாட்களில்
பார்க்கும் இடங்களில் எல்லாம் பச்சைக் கம்பளியைப்
பரவிடச் செய்வாள், பூக்களும் பூத்து….
வயல்களுக்குள் நட்ட பயிர்களெல்லாம்
பூப்படைந்து களிப்புறும்
முள்வேளிகளின் பாதுகாப்பினால்..நிலமகள் வீட்டு
வயல்வெளிகளில் எங்கள் காளைகள் களிப்புடன்
ஏர் பூட்டிக் கோலமிடும்…
மார்கழி மாத வெண்ணிலவு, பனிப் போர்வை போர்த்தி
எங்களை உறங்கவைக்க, போர்வையை விலக்கிக்கொண்டு
குளத்து நீரில் தன் முகம் பார்த்துக் கொண்டு
கதிரவன் எழுவான் மிகவும் கதகதப்பாய்…
கோவில் மாடங்களில் உள்ள அகல்விளக்குகள்
காற்றோடு விளையாடிக் கொண்டிருக்கும் யார் ஜெயிப்பதென்று..
இது என்ன அற்புத மலரோவென்று செந்நிற
வெண்ணிற தாமரைகளைச் சுற்றி வரும் வாத்துகள்…
பொன்னிற மாலை கதிரவனை கண்டு
அதன் காதில் தன் காதலை சொல்ல
பறந்து செல்லும் வெண்ணிற கொக்குகள்…
கடும் உழைப்பினால் களைப்புற்று வரும்
காளையர்களை, கதைகள் பேசி , நிழலில்
இளைப்பார வைக்கும் ஆலமரக் கிளிகள்…
இவையென்றும் என் மனதில்
மாறாத எங்கள் கிராமத்தின் மண் வாசம்…
Feedback/Errata