25 என் வானத்தின் இயற்கையை உன்னைப்போல் மாற்ற வேண்டும்..
நீ வந்த என் வாழ்வின் வானத்தில்
விண்மீன் பூக்களுக்கு திரும்ப
உன் போல் மிளிர கற்றுக்கொடுக்க வேண்டும்..
நிலவுக்கு உன்முகம் போல்
என்றும் பிரகாசமாய் ஒளிர கற்றுக்கொடுக்க வேண்டும்
தேய்பிறை இல்லாமல்….
உன்போல் வெட்கத்தில் நாணுவதை
தென்றலில் ஆடும் மலர்ச் செடிகளுக்கு
தோகையை விரித்து ஆடும் மயில்களுக்கு
பயிற்றுவிக்க வேண்டும்…
உன் மேனி சிலிர்க்க, கூந்தல் முடி அலைபாய,
பனிக்காலங்களில் வீசும் மெல்லிய தென்றலைப்
பழக்க வேண்டும்,
குளிரினால் என்னை அணைத்துக் கொள்ள…
உன்னால் என் வாழ்வின்
இயற்கையை திரும்பவும் மாற்ற வைக்கிறாய்…
பகல் இரவுகளில் பூக்கும் மலர்களுக்கு
என்றும் வாடா வண்ணங்களாய்
உன் புன்னகைப் பூ பூக்கும்
விதைகளைக் கற்றுத் தர வேண்டும்…
உன் கண்களின் கருவிழியில்
விநாடிக் கொரு முறை மிளிரும் காந்த ஒளியைப் போல்
மின்மினிப் பூச்சிகளுக்கு மின்ன கற்றுக் கொடுக்க வேண்டும்…
பூக்களின் நிறங்களாய், வானவில் வண்ணங்களாய்
வழக்கமாய் நீ உடையணியும் கலைகளை
வண்ணத்துப் பூசிகளுக்கு கற்றுத் தர வேண்டும்…
உன்னோடு உலவிக் கொண்டிருக்கும் நாட்களை
மகிழ்ச்சியை தாங்கி நிற்கும் வசந்த காலமாகவும்
என்னை தோள் சாய்ந்து உன் நாணத்தை
வெளிப்படுத்தும் காலங்களை கார் காலமாகவும்
என்னை நீ செல்லமாய் கடிந்து கொண்ட பொழுதுகளை
இளவேனிற் காலமாகவும் மாற்ற வேண்டும்…
என்னை மகிழ்ச்சியின் சிலிர்ப்புகளால்
பொதித்து வைத்துக் கொள்ளும்
உன் தேகத்தின் மாய வித்தைகளை,
வெண் மேகங்களுக்கு விளக்க வேண்டும்….
என்னை நீ நினைத்துக் கொண்டிருக்கும் நொடிகளில்,
என் முத்தங்களை மழைத்துளிகளாய் அனுப்பி
உன் முகத்தினில் மழைத் துளியை முத்தமிட பழக்க வேண்டும்…
Feedback/Errata